செய்திகள்
மழை

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை

Published On 2021-10-03 10:37 GMT   |   Update On 2021-10-03 10:37 GMT
ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராமேசுவரம்:

இலங்கையையொட்டி உள்ள கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடை விடாமல் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் காலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் நேற்று காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக பெய்தது. பின்னர் மீண்டும் சாரல் மழை பெய்தது.

ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் கோவில் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ராம தீர்த்தம் பகுதியில் மழைநீர் குளம்போல் அதிகஅளவில் தேங்கி நின்றது. தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மூர்த்தி அந்த பகுதியை பார்வையிட்டதுடன் தொடர்ந்து அங்கு சாலையில் தேங்கி இருந்த மழைநீரை உடனடியாக வெளியேற்றும் பணியில் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. பலத்த மழையால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணி மண்டபம் முன்பும் சாலையோரத்திலும் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றது.

கடந்த சில வாரங்களாக ராமேசுவரம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நல்ல மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ராமேசுவரம்-65.2, பாம்பன்-47.6, தங்கச்சிமடம்-35.2 என‌ பதிவாகிஉள்ளது.
Tags:    

Similar News