செய்திகள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் மெயின் ரோட்டில் மழைநீர் தேங்கி நின்ற காட்சி

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை: 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2021-10-03 06:04 GMT   |   Update On 2021-10-03 06:04 GMT
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழைக்கு மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் பகுதியில் நின்றிருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலையில் கனமழையும் கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல், மாலை நேரம் போல காட்சியளித்தது. மாலை 4 மணிக்கு பிறகு மாநகர் பகுதிகளான சிங்காநல்லூர், காந்திபுரம், ரெயில் நிலையம், கிராஸ்கட் ரோடு, பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை பெய்து கொண்டே இருந்ததால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு 9 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோவை- மேட்டுப்பாளையம் சாலை ஜோதிபுரம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையின் இரு புறங்களிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடையில் புகுந்த தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றினர். இதேபோல் சூலூர், சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழைக்கு மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் பகுதியில் நின்றிருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இன்றும் மழை பெய்து வருகிறது. இதேபோல் கூடலூர், பந்தலூர், ஊட்டியிலும் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News