செய்திகள்
கோப்புபடம்

முககவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மக்கள் - சாலையில் வீசப்படுவதால் தூய்மைப்பணியாளர்கள், கால்நடைகள் பாதிக்கும் அபாயம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

Published On 2021-09-29 07:43 GMT   |   Update On 2021-09-29 07:43 GMT
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் பொதுமக்கள் சிலர் கொரோனா விதிகளை மீறி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏறி இறங்கி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 3 வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்  நடத்தப்பட்டு உள்ளது. இதில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. 

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் பொதுமக்கள் சிலர் கொரோனா விதிகளை மீறி வருகின்றனர்.  

குறிப்பாக முககவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்களும் கொரோனா அச்சத்தில் முககவசங்கள் அணிந்து வந்தனர். அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

நாட்கள் செல்ல செல்ல மூக்கை மறைத்து அணியக்கூடிய முககவசங்கள் மூக்கிற்கும் கீழும், அதன்பின் கழுத்து வரையும் அணிய ஆரம்பித்தனர். இப்போது அதுவும் இல்லை. ஏதோ முககவசம் அணிய வேண்டும் என்பதற்காக பலர் வெளியில் அணிந்து செல்கின்றனர். 

முககவசம் அணியாதவர்களை கடைகளுக்குள் அனுமதிக்க கூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களும் அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பயந்து வாசல் முன்பு நின்று பொதுமக்களிடம் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

சிலர் கேட்காத நிலையில், வந்தவர்களை திருப்பிஅனுப்ப வேண்டாம் என்பதற்காக வேறு வழியின்றி உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசத்தை ஒழுங்காக அணியாமல் உள்ளனர். 
 
மேலும் பயன்படுத்திய முகக்கவசங்களை முறையாக அப்புறப்படுத்துவதில் பலர் அலட்சியம் காட்டுகின்றனர். குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பஸ்களில் இருந்து இறங்கியதும், திறந்தவெளியில் வீசி எறிவது அதிகரித்துள்ளது. 

இதனால் பல்வேறு கழிவுகளுக்கு இணையாக எங்கு பார்த்தாலும், இத்தகைய கழிவுகள் ரோட்டோரங்களில் அதிகளவு காணப்படுகிறது. தொற்று பாதித்தவர்கள் அணியும் முகக்கவசங்களால் பிறருக்கும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. நகர, கிராமப்புறங்களில் மட்கும், மட்காத குப்பையுடன் தற்போது வீடு தோறும் முகக்கவசங்களும் முக்கிய குப்பையாக மாறியுள்ளது. 

வெறும் கையில் அவற்றை அப்புறப்படுத்தும் போது சுகாதார பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பயன்படுத்திய முகக்கவசங்களை அப்புறப்படுத்தும் முறை குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், திறந்தவெளியில் வீசப்பட்ட முககவச  கழிவுகளால் தொற்று மேலும் அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேய்ச்சல் நிலங்களில் பரவிக்கிடக்கும் முகக்கவசங்களால் கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் வருவதால் வரும் நாட்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைக்கு படையெடுப்பார்கள். 

இதன் மூலம் கூட்டநெரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. கடந்த ஆண்டு முதல் அலையின் போது தீபாவளி பண்டிகையின் போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்திருந்தது.

ஆனால் தற்போது கொரோனா இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.  மத்திய அரசும் பண்டிகை காலத்தையொட்டி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. 

எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முககவசம் அணிவது குறித்தும் தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுகளை கையாளும் முறை குறித்து பயிற்சியளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News