செய்திகள்
கொரோனா வைரஸ்

கல்வி நிறுவனங்களை திறந்த பின் இந்த மாவட்டத்தில் மட்டும் 87 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2021-09-24 05:30 GMT   |   Update On 2021-09-24 06:28 GMT
பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை:

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டது.

இதன்படி ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன்படி சிறப்பு முகாம்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதே போல 18 வயதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலை கண்டு பிடிப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன்படி கடந்த 1-ந் தேதி முதல் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர் உள்ளிட்ட பள்ளிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 25 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல சரவணம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரி, பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி உள்பட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1-ந் தேதியில் இருந்து கோவை மாவட்டத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News