செய்திகள்
பள்ளி மாணவிகள்

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் சேர்க்கை- அதிகாரி தகவல்

Published On 2021-09-23 06:05 GMT   |   Update On 2021-09-23 07:22 GMT
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணமும், படிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 62 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை குறைந்த அளவிலேயே மாணவர்கள் கல்வி கற்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வீடுகளில் இருந்து படித்து வருகிறார்கள். பொது முடக்கத்தால் பெரும்பாலான பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தார்கள்.



இதனால் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இந்த வருடமும் கடந்த வருடத்தை காட்டிலும் மாணவர்கள் அதிகளவு சேர்ந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் நடந்தப்படும் பள்ளிகளில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 500 பேர் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 90 ஆயிரமாக இருந்தது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரி பாரதிதாசன் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதி வரை இருந்தாலும் தற்போது மாணவர் சேர்க்கை முடியும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 12 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணமும், படிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுவதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.


Tags:    

Similar News