செய்திகள்
கடற்கரையில் குப்பைகளை அகற்றிய அண்ணாமலை - எல் முருகன்

பிரதமர் மோடி பிறந்தநாளில் தூய்மை பணி- கடற்கரையில் குப்பைகளை அகற்றிய அண்ணாமலை

Published On 2021-09-17 05:53 GMT   |   Update On 2021-09-17 06:55 GMT
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி வடசென்னையில் 710 கிலோ மீன்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டியும் அவர் பொது சேவையில் அரசாங்க தலைவராக பணியாற்றி வருகிற அக்டோபர் 7-ந்தேதி 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டியும் தமிழக பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ‘சேவை மற்றும் சமர்ப்பணம்’ என்ற பிரசாரத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெறும் தூய்மை பணியினை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றார்.

தூய்மை பணியை தொடங்கி வைக்கும் வகையில் அண்ணாமலையும், எல்.முருகனும் கடற்கரையில் குப்பைகளை அள்ளினார்கள்.

மேலும் நாளை (18-ந்தேதி) சென்னை துறைமுகம் தொகுதியில் 710 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்குகிறார்.

சுதந்திர தின பவளவிழா ஆண்டையொட்டி தியாகிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு தமிழக பா.ஜனதா இளைஞரணி சார்பில் மரியாதை செய்யப்பட உள்ளது. அக்டோபர் 2-ந்தேதி சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய இடங்களில் இளைஞரணி சார்பில் தூய்மை பணிகளும், இளைஞர்கள் இணைந்து தேசிய கீதம் பாடும் நிகழ்வும் நடைபெறும்.



கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் பணிகளையும், சாதனைகளையும் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மோடி மேளா கண்காட்சி அந்தந்த மாவட்ட இளைஞரணியினரால் நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி புரிந்த எண்ணற்ற சாதனைகளை மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விளக்குதல், அவரின் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளும் இன்று முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது.

மேலும் ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல், வினாடி-வினா போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒன்றிய அளவில் நடத்த இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பதாக இளைஞர் அணி நிர்வாகி வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜனதா மீனவர் அணி சார்பில் வடசென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோடு ரே‌ஷன் கடை எதிரில் 710 கிலோ மீன்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில் மிகப்பெரிய ராட்சச மீன்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கு மீனவரணி மாநில தலைவர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 710 கிலோ மீன்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

பிரதமர் மோடி
பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜனதா சார்பில் இன்று காலை ரெட்டேரி லட்சுமி புரம் எஸ்.எஸ். கல்யாண மஹாலில் பெண்கள் பங்கேற்ற 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.

மாதவரம் ரவுண்டானா அருகில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை தர்மபிரகாசில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சென்னை வாணி மஹால், சென்னை ஐகோர்ட்டு, கட்சி அலுவலகமான கமலாலயம், திருவான்மியூர் ஆகிய இடங்களிலும் மோடி பிறந்தநாள் விழா நடக்கிறது.

சென்னை துறைமுகத்தில் இன்று மாலை ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை
அண்ணாமலை
வழங்குகிறார். மாலையில் பட்டினப்பாக்கத்தில் கால்பந்து போட்டி நடக்கிறது. இதில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


Tags:    

Similar News