செய்திகள்
அரிசியுடன் பறிமுதல் செய்த மினி வேனை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே தேர்தலுக்காக பொதுமக்களுக்கு வழங்கிய அரிசி பறிமுதல்

Published On 2021-09-17 04:22 GMT   |   Update On 2021-09-17 04:22 GMT
கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கனங்கூர் கிராம காலனி பகுதியில் மினிவேனில் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதாக வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடினார்.

அப்போது போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அரிசி வழங்கியதாக பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் வீரமுத்து (வயது 61) என்பவர் மீது புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வீரமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மினி வேன் மற்றும் அதில் இருந்த 3 மூட்டை அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் ஆதாயத்துக்காக வீடு வீடாக சென்று அரிசி வழங்கிய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News