செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Published On 2021-09-09 03:36 GMT   |   Update On 2021-09-09 03:36 GMT
மாநகர போக்குவரத்து கழகம் 210 சிறிய பஸ்களை இயக்கியது. தற்போது 66 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சென்னை:

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்களை ஊக்குவிப்பதற்காக முதல்-அமைச்சரின் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும். அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை 2020 முதல் 2021-ம் ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2011-12-ம் ஆண்டு 2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரமாக இருந்த தினசரி பயணிகளின் எண்ணிக்கை, 2020-21-ம் ஆண்டு 73 லட்சத்து 64 ஆயிரமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண பஸ்களில் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 7,312 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஜூலை 12-ந் தேதி முதல் ஆகஸ்டு 26-ந் தேதி வரை சாதாரண கட்டண பஸ்களில் பயணம் செய்த மொத்த பயணிகளில் சுமார் 60.70 சதவீதம் பெண்கள் பயணித்துள்ளனர். இந்த இலவச பயண வசதி, திருநங்கைகள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் 210 சிறிய பஸ்களை இயக்கியது. தற்போது 66 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளின் பயன்பாடு குறைந்து அதிக இழப்பு ஏற்பட்டதால் 144 சிறிய பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

நிறுத்தப்பட்டுள்ள சிறிய பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, பிற பகுதிகளில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை உயர்வதால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பஸ் போக்குவரத்தை மேம்படுத்த, பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வாங்குவதற்கு ஜெர்மன் நிதி நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 12,000 பி.எஸ்.-6 ரக பஸ்கள் மற்றும் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இந்த ஆண்டு முதல் 5 ஆண்டு காலங்களில் கொள்முதல் செய்யப்படும்.

இதற்கான தொகையில் 80 சதவீதத்தை ஜெர்மன் நிதி நிறுவனம் வட்டி இல்லா கடனாகவும், மீதமுள்ள 20 சதவீதம் தமிழக அரசின் பங்காகவும் இருக்கும். முதல் 2 கட்டங்களில் 2,213 டீசல் பஸ்களும், 500 மின்சார பஸ்களும் வாங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News