செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டென்மார்க் குழுவினர்.

கடலில் காற்றாலை மின்சார உற்பத்தி- மு.க.ஸ்டாலினுடன் டென்மார்க் குழு சந்திப்பு

Published On 2021-09-08 06:50 GMT   |   Update On 2021-09-08 08:16 GMT
பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டென்மார்க்குடன் கிரீன் மின்சக்தி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டார்.
சென்னை:

காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 சதவீதம் தமிழகத்தின் பங்காகும். தமிழ்நாட்டில் மேலும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை உள்ளது. இங்கு அதிகமாக காற்று வீசுவது வழக்கம். இதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

டென்மார்க் நாட்டில் இதேபோல கடலில் காற்றாலை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். எனவே டென்மார்க்குடன் இது சம்பந்தமாக அணுகப்பட்டது. அவர்கள் தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின்சார நிலையங்களை அமைத்து தர முன் வந்திருப்பதுடன் பெரிய அளவில் முதலீடும் செய்கிறார்கள்.

மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதல்கட்டமாக காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காற்று அதிகம் வீசக்கூடிய கடற்கரைகளை தேர்வு செய்து அங்கும் காற்றாலைகளை அமைக்கிறார்கள்.

டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல இங்கும் மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக் கொடுக்க இருக்கிறது.

இது குறித்து முடிவு செய்வதற்காக டென்மார்க் மின்சக்தி மந்திரி ஜானிக் ஜோர்சென்சன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது.

அந்த குழுவினர் இன்று கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர்
மு.க. ஸ்டாலினை
சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டில் எந்த மாதிரியான காற்றாலைகளை அமைப்பது? எவ்வாறு அவற்றை செயல்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தினார்கள்.



பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டென்மார்க்குடன் கிரீன் மின்சக்தி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. கடலில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நாடு ஏற்கனவே தமிழ்நாட்டில் ரூ.5,500 கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இப்போது கடல் காற்றாலை மின் உற்பத்தியையும் செயல்படுத்த உள்ளது.


Tags:    

Similar News