செய்திகள்
நல்லாசிரியர் விருது வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2021-09-05 13:02 GMT   |   Update On 2021-09-05 13:02 GMT
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை:

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். 

அந்த வகையில், 2020-2021ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.



இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News