செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Update: 2021-08-14 05:21 GMT
சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டபடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து இருப்பதன் மூலம் சிவசங்கர் பாபா மீதான பிடி இறுகியுள்ளது.

சென்னை:

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். டேராடூனில் தங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதையடுத்து சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கேளம்பாக்கம் பள்ளியிலும் அவரை அழைத்து சென்று பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினார்கள்.

இதனை அடிப்படையாக வைத்து சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாரித்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு கோர்ட்டில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

அது தொடர்பான ஆதாரங்கள், விசாரணை விவரங்கள் உள்ளிட்டவை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் கைது செய்யப் படுவோர் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு எளிதாக ஜாமீன் கிடைக்காது.

அந்த வகையில் சிவசங்கர் பாபா வழக்கில் போலீசார் நேற்று 59-வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளனர். இதன் மூலம் கடந்த 60 நாட்களாக சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா ஜாமீனில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிவசங்கர் பாபா மீதான வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விட்டோம். அடுத்தகட்டமாக வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை முழுமையாக திரட்டி உள்ளோம். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மின்னணு ஆதாரங்கள் கிடைத்து உள்ளன” என்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவசங்கர் பாபா கைதான நாளில் இருந்து தொடர்ந்து செங்கல்பட்டு சிறையிலேயே உள்ளார். திட்டமிட்டபடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து இருப்பதன் மூலம் சிவசங்கர் பாபா மீதான பிடி இறுகியுள்ளது.

சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலுமே போக்சோ சட்டப்பிரிவு பாய்ந்துள்ளது. இத னால் வழக்கு விசாரணை முடியும்போதும் சிவசங்கர் பாபாவுக்கு உரிய தண்டனையை நிச்சயம் வாங்கி கொடுப்போம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News