செய்திகள்
நெல்லை டவுனில் ஜே.சி.பி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காடசி.

நெல்லையில் இன்று 500 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2021-08-10 09:02 GMT   |   Update On 2021-08-10 09:02 GMT
ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை தொடர்ந்து, அசம்பாவிதம் ஏற்படாத வாறு அந்தந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் போக்குவரத்து காவலர்களும் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் முக்கிய நெடுஞ்சாலைகளான மதுரை ரோடு, திருவனந்தபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோடு, அம்பை ரோடு, தென்காசி ரோடு, சங்கரன்கோவில் ரோடு ஆகியவைகள் உள்ளன.

இந்த சாலைகளில் கடை வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து, முகப்பு பகுதிகளை நீட்டியும், விளம்பர பலகைகள் வைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதன் காரணமாக சி.சி.டி.வி. கேமிராக்களில் முக்கிய நிகழ்வுகள் பதிவாகாமல் மறைக்கப்படுவதாகவும் புகார் சென்றன. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று மாநகராட்சி கமி‌ஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில், உதவி கமி‌ஷனர்கள் சுகி பிரேமலா (மேலப்பாளையம்), அய்யப்பன் (தச்சை), ஜகாங்கீர் (பாளை), நாராயணன் (டவுன்) ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கிருஷ்ணசாமி, உதவி என்ஜினீயர் வேலாயுதம் மற்றும் சாலை ஆய்வாளர்களும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சார்பாக ஜே.சி.பி. எந்திரம் மூலமும், தூய்மை பணியாளர்களும் கூடுதலாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாளை முருகன்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் ரோடு மற்றும் திருவனந்தபுரம் ரோடு பகுதியிலும், நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டிலும், எஸ்.என். நெடுஞ்சாலை, டவுன் ரத வீதிகள், காட்சி மண்டபம், டவுன் வழுக்கோடை பகுதிகள், தொண்டர் சன்னதி, வயல்தெரு, வ.உ.சி. தெரு உள்பட முக்கிய சாலைகளின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பல்வேறு கடைகளில் நிழலுக்காக போடப்பட்ட கூரைகளும் அகற்றப்பட்டது. கூடுதலாக கட்டப்பட்டிருந்த கட்டிட முகப்புகள், பெயர் பலகைகள் ஆகியவைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இன்று மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு முன்பே வியாபாரிகளே தங்களது பொருட்களை அப்புறப்படுத்தினார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை தொடர்ந்து, அசம்பாவிதம் ஏற்படாத வாறு அந்தந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் போக்குவரத்து காவலர்களும் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

ஆனாலும் சில இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து சென்றது. தொடர்ந்து இன்று பிற்பகல் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News