செய்திகள்
சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாழை மர அலங்கார தோரணங்கள்

சட்டசபை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க 318 பேருக்கு அழைப்பு

Published On 2021-08-02 08:54 GMT   |   Update On 2021-08-02 10:37 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டு பளீச் என காணப்படுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்துள்ளார்.

கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கியுள்ள அவர் மாலை 4.35 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோட்டையில் உள்ள சட்டசபைக்கு வருகிறார். அவர் வந்ததும் மாலை 5 மணி அளவில் விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை 6 மணிவரை 1 மணிநேரம் விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என 318 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு சட்டசபையில் 10 இடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை மண்டபத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமர வைக்கப்படுகிறார்கள். சட்டசபையின் மேல் மாடம், பால்கனி ஆகியவற்றிலும் வி.ஐ.பி.க்கள் அமர வைக்கப்படுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள் பழைய அமைச்சரவை ஹாலில் அமர்ந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே எல்.இ.டி. ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக வழக்கமாக போடப்படும் மேஜையை எடுத்துவிட்டு அங்கு ஷோபாக்கள் போடப்பட்டுள்ளன.

விழா நிகழ்ச்சிகளை பார்க்க வரும் அனைவரும் மாலை 4.30 மணிக்குள் இருக்கையில் வந்து அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டு பளீச் என காணப்படுகிறது. சட்டசபையின் வெளிப்புறமும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவடைந்துள்ளது. சட்டசபையை சுற்றியுள்ள சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளன. சட்டசபை நுழைவு வாயிலில் வாழைத்தோரணங்களும் கட்டப்பட்டு அந்த வளாகமே விழாக்கோலமாக காட்சி அளிக்கின்றன.


Tags:    

Similar News