செய்திகள்
ஓட்டல்களில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் மும்முரமாக நடைபெற்றன

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்: இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்

Published On 2021-07-05 02:50 GMT   |   Update On 2021-07-05 02:50 GMT
வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, 8-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 8-வது ஊரடங்கில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், பஸ்சில் குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் செல்வோர் இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்.

அதேநேத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இன்று முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டீக்கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் டீ அருந்த அனுமதிக்கப்படுவர். கேளிக்கை விடுதிகளில் (கிளப்) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் (ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள்), விருந்தினர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருவிழாக்கள்மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News