செய்திகள்
பள்ளி ஆசிரியர்

75 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

Published On 2021-06-23 08:15 GMT   |   Update On 2021-06-23 08:15 GMT
பெற்றோர்களின் நிலைமை அறிந்து கல்வி கட்டணத்தை 2 அல்லது 3 தவணையாக பெற்றுக் கொள்கிறோம். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் கல்வி கட்டணத்தை பின்னர் உயர்த்தி வசூலிக்க முடியாது.
சென்னை:

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு 75 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீருடை, பேருந்து உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலே‌ஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

கடந்த கல்வி ஆண்டு (2020-21) கல்வி கட்டணம் 75 சதவீதம் வசூலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த வருடம் பெற்றோரிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கு கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெளிவாக தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டு 85 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால் தற்போது கல்வித்துறையின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது.

75 சதவீதம் கல்வி கட்டணத்தை தற்போது நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம். ஆனால் மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

பெற்றோர்களின் நிலைமை அறிந்து கல்வி கட்டணத்தை 2 அல்லது 3 தவணையாக பெற்றுக் கொள்கிறோம். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் கல்வி கட்டணத்தை பின்னர் உயர்த்தி வசூலிக்க முடியாது.

மேலும் கல்வி கட்டணத்தை 75 சதவீதம் வசூலிக்க வேண்டும் என்று கூறுவதால் தனியார் பள்ளிகளின் நிர்வாக செலவு, ஆசிரியர்கள் சம்பளம் எதுவும் குறையப் போவதில்லை. இதனால் பள்ளிகளை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்த நிலையில் பெற்றோர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்போது 75 சதவீதம் கல்வி கட்டணத்தையும், மீதமுள்ள 25 சதவீதத் தொகையை பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News