செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

Published On 2021-06-22 11:01 GMT   |   Update On 2021-06-22 11:01 GMT
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக பெருந்தொற்று நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், ஓட்டல்கள் மற்றும் விருந்தினர் அரங்கங்களின் நடைபெறும் திருமண நிகழ்வுக்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்கள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், ஓட்டல்கள், விருந்தினர் அரங்கங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

திருமண மற்றும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். அனைவரும் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக நுழைவு வாயிலில் கிருமி நாசினி திரவம் வைக்க வேண்டும். அனைவருக்கும் வெப்பமானி சோதனை செய்து பதிவேட்டில் பதிவு மேற்கொண்டு அனுமதிக்க வேண்டும்.

வருவாய் வட்டாட்சியரிடம் பதிவு செய்யப்படும் விவரங்களை அடிப்படையாக கொண்டு வருவாய்துறை, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திடீர் தணிக்கை மேற்கொள்வார்கள். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். மேற்காணும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என கள ஆய்வில் பார்க்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு, 51-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News