செய்திகள்
முக ஸ்டாலின்

பிரதமருடன் இன்று சந்திப்பு- டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2021-06-17 04:12 GMT   |   Update On 2021-06-17 05:19 GMT
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.

மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய ‘நீட்’ தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை தலைதூக்குகின்றன.

மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை தேவைப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 7.30 மணியளவில் தனி விமானத்தின் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மாலை 5 மணி அளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.



இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் அளிக்க உள்ளார்.

இந்த பயணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் உமாநாத் ஐஏஎஸ், முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.


இந்த பயணத்தின்போது ஜிஎஸ்டி பாக்கித்தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்குகிறார்.

டெல்லி செல்லும் முதல்-அமைச்சரை வழி அனுப்பும் வகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன், மா.சுப்ரமணியன், ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
Tags:    

Similar News