செய்திகள்
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி

கொரோனா பரிசோதனை முடிவுகளை இனி விரைவாக தெரிந்து கொள்ளலாம்- அரசு ஆஸ்பத்திரி ஏற்பாடு

Published On 2021-06-15 03:32 GMT   |   Update On 2021-06-15 03:32 GMT
கொரோனா நோய் தொற்று அறிய மாதிரிகள் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் சொந்த பயன்பாட்டிலுள்ள அலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
மதுரை:

மதுரை மருத்துவக் கல்லூரி, நுண்ணுயிரியியல் கழகத்தில் கொரோனா ஆர்.டி-பி.சி.ஆர். ஆய்வகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன் பரிசோதனை முடிவுகள் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக பொதுமக்கள் பெறும் வசதி உள்ளது.

மேலும் பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும் நகல் எடுக்கவும் வசதியாக இணைய தள முகவரியும் குறுஞ்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா நோய் தொற்று அறிய மாதிரிகள் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் சொந்த பயன்பாட்டிலுள்ள அலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பரிசோதனை முடிவுகளை www.covid19mdumc.in என்னும் இணையதளத்திற்கு தங்களது 13 இலக்க சோதனை மாதிரி பதிவு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் மாதிரிகள் கொடுத்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் 12 மணி நேரத்திற்குள் இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கான பணிகளை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி செய்து உள்ளது.
Tags:    

Similar News