செய்திகள்
இறந்த ஆட்டுக்குட்டிகளின் உடல்களை கால்நடைத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

திண்டுக்கல் அருகே 22 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

Published On 2021-06-05 10:04 GMT   |   Update On 2021-06-05 10:04 GMT
திண்டுக்கல் அருகே கிடையில் அடைக்கப்பட்டு இருந்த 22 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவர் தனக்கு சொந்தமான 143 செம்மறி ஆடுகள், 22 ஆட்டுக்குட்டிகளுடன் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டை குஞ்சனம்பட்டி பகுதியில் கிடை அமைத்து பராமரித்து வந்தார்.

இந்நிலையில் கிடையில் அடைக்கப்பட்டு இருந்த 22 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முத்துச்செல்வம் இது குறித்து கால்நடை மருந்தக உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் விஜயகுமார், திண்டுக்கல் உதவி இயக்குனர் ஆறுமுக ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து இணை இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், குஞ்சனம்பட்டி பகுதியில் 2 கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 22 ஆட்டுக்குட்டிகள் மட்டும் உயிரிழந்துள்ளன. இறந்த ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்ததில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஆனாலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னையில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதிக வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக ஆட்டுக்குட்டிகள் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் மற்ற ஆடுகளை காற்றோட்டமான பகுதியில் அடைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
Tags:    

Similar News