செய்திகள்
இடமாற்றம்

பொதுமக்களை ஆபாசமாக திட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்

Published On 2021-06-04 03:01 GMT   |   Update On 2021-06-04 03:01 GMT
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த வாலிபரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மடக்கிப்பிடித்தார். தொடர்ந்து அந்த வாலிபரின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியில் கொரோனா ஊரடங்கை மீறி பொதுமக்கள் சிலர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானூர் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மடக்கிப்பிடித்தார். தொடர்ந்து அந்த வாலிபரின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரின் பெற்றோரை ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர், தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசினார். இந்த சம்பவத்தை அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அதிரடியாக வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
Tags:    

Similar News