செய்திகள்
ஆலையை அமைச்சர்கள் பார்வையிட்ட போது எடுத்தப்படம்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-06-01 08:31 GMT   |   Update On 2021-06-01 12:44 GMT
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவும் பழமையான ஆலை என்பதால் எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை புனரமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

இந்த ஆலையை நவீனப்படுத்தும் கோரிக்கை விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்த ஆலையை நவீனபடுத்துவதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் உறுதுணையாக இருப்போம். 

மேலும் பணியாளர்களுக்கு கடந்த ஆறு, ஏழு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படாத ஒரு சூழ்நிலை நிலவி வந்தது. இங்கு இருக்கின்ற சர்க்கரையின் இருப்பை அதிகப்படுத்தி அதனை வினியோகம் செய்து கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உடனுக்குடன் நிலுவைத் தொகை வழங்கப்படும். 

அதே போல் இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள தொகை வழங்கப்படும். இதனால் மீண்டும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக பணிபுரியக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸலி ராஜ்குமார், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கீதா, மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி, முன்னாள் எம்.எல்.ஏ,. ஜெயராம கிருஷ்ணன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் எம்.மத்தீன், முன்னாள் உடுமலை நகர்மன்ற உறுப்பினர் அரசகாளை, சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் சுப்புராஜ், அலுவலக மேலாளர் (பொறுப்பு) கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News