செய்திகள்
கொரோனா வைரஸ்

தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம்- சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதி

Published On 2021-05-28 09:42 GMT   |   Update On 2021-05-28 09:42 GMT
ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை:

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், 60 முதல் 65 சதவீதம் பேருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இது போன்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் ஆம்புலன்சில் உயிரிழக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-


 

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சேலம், சென்னையில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. தவிர ஒடிசாவில் இருந்து ரெயிலில் வந்த ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நாளொன்றுக்கு 30.85 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவையுள்ளது.

ஆனால், 25 கிலோ லிட்டர் மட்டுமே தற்போது கிடைக்கிறது. கடந்த வாரங்களில் 10 கிலோ லிட்டர் தேவையாக இருந்த நிலையில் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளே நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் தற்போது தேவை 5 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் 2 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். வரும் வாரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முற்றிலும் குறையும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News