செய்திகள்
நட்சத்திர ஏரி தற்போது ஆட்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் பிறந்தநாள் கொண்டாட்டமின்றி களை இழந்த கொடைக்கானல்

Published On 2021-05-27 08:55 GMT   |   Update On 2021-05-27 08:55 GMT
கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் உருவான நாள் எவ்வித ஆராவாரம் இன்றியும் சுற்றுலா பயணிகள் இன்றியும் 2-வ‌து ஆண்டாக‌ களையிழந்து காணப்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலின் முந்தைய பெயர் கொடிக்கானல் ஆகும். கொடிகளால் சூழப்பட்ட காட்டுப்பகுதி என்பதால்தான் இதற்கு அப்பெயர் வந்தது. கொடி என்றால் காடுகளில் மரங்களையோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களைப் பற்றி வளரக்கூடியது என்று பொருள். கானல் என்றால் காடு என்பது பொருள்.

இதன் காரணமாக கொடிக்கானல் என அழைக்கப்பட்ட நகரம் நாளடைவில் மருவி கொடைக்கானலாக மாறியது நிஜத்திலும் இந்த இடம் அப்படித்தான் இருந்தது. மிகுந்த பரப்பளவும், அதிக அடர்த்தியாகவும், அநேக வன விலங்குகளின் வாழ்வாதாரமாகவும், பச்சை வர்ண பட்டு உடுத்திய அழகு தேவதையாகவும் திகழ்ந்து வருகிறது இந்த மலைகளின் இளவரசி.

அடர்ந்த வனப்பகுதியாக இருந்த கொடைக்கானலில் கடந்த 1845 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓய்வு இல்லத்தில் மே 26 ஆம் தேதி அன்று முதல் முதலாக குடியேற்றத்தை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல நகர் பகுதியாக மாற்ற தொடங்கினர். இதனை அடிப்படையாக கொண்டு பழங்குடி மக்களை தவிர்த்து சமவெளிப்பகுதிகளில் இருந்தும், தரைப்பகுதிகளில் இருந்தும் முதலில் வெளிமனிதர்கள் குடியேறிய ஆண்டாக 1845 ஆம் ஆண்டு உள்ளது.

இவ்வாறு வெளிமக்கள் குடியேறிய ஆண்டினை கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாக கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் பல்வேறு தரப்பு மக்களுக்கும், வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக நகராட்சியால் கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும் இந்த நாளில் கொடைக்கானல் மேம்பாட்டுக்காக சில திட்டங்களும் அறிவிக்கப்படும். பொது மக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியடைவர்.

இந்நிலையில் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்களும் தடைபட்டுள்ளது. மேலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் தீவிரம் காட்டப்பட்டு வருவதாலும் மலைகளின் இளவரசி தனது 176-வது பிறந்தநாள் கொண்டாட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. கடந்த ஆண்டும் இதே நிலைதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News