செய்திகள்
பணியிடை நீக்கம்

கைதானவர்களின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1 லட்சம் சுருட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Published On 2021-05-21 02:44 GMT   |   Update On 2021-05-21 02:44 GMT
கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்றதாக கைதானவர்களின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் சுருட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைக்காமல் நோயாளிகளின் உறவினர்கள் சிரமப்பட்டு வந்தனர். உயிரை காப்பாற்றினால் போதும் என்பதால் பலர் அதிகவிலை கொடுத்து கள்ளச்சந்தையில் இந்த மருந்தை வாங்கும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு சென்னையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு சிலர் விற்றனர். இவ்வாறு விற்பவர்களை சென்னையில் போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் 29 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், ஏட்டு சரவணக்குமார் ஆகியோர் சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது. அவர்கள் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் இதில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இன்ஸ்பெக்டர் ஒருவர், அவர்கள் இருவரையும் மாட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக முழுஅளவில் விசாரணை நடத்த கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News