செய்திகள்
விற்பனையாகாத பூக்கள் மார்க்கெட்டின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திருப்பூர் சந்தையில் விலை சரிவால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்

Published On 2021-05-06 12:35 GMT   |   Update On 2021-05-06 12:35 GMT
திருப்பூர் சந்தையில் பூக்கள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் குப்பையில் கொட்டப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சம்பங்கி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர்-பல்லடம் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள். மேலும், காய்கறி உள்ளிட்ட பொருட்களும் அந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சந்தையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. ஆனாலும் விற்பனையாகாத பூக்களை பலரும் ஆங்காங்கே கொட்டி வரும் அவலமும் நடந்து வருகிறது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கோவில் விழாக்களுக்கு கட்டுப்பாடு, திருமணங்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.

இதன் காரணமாக பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.

இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம். குறிப்பாக அரளி கிலோ ரூ.10-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், கோழிக்கொண்டை ரூ.10-க்கும், முல்லைப்பூ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News