செய்திகள்
ஹஜ்

இந்திய ஹஜ் பயணிகளுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம்

Published On 2021-05-01 02:59 GMT   |   Update On 2021-05-01 02:59 GMT
சவுதி அரேபியாவுக்கு வருகைதரும் புனிதப் பயணிகள் அங்கு புறப்படுவதற்கு முன் இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று மும்பை இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சவுதி அரேபியாவின் சுகாதார மந்திரி மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின்னஞ்சலின்படி, சவுதி அரேபியாவுக்கு வருகைதரும் புனிதப் பயணிகள் அங்கு புறப்படுவதற்கு முன் இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று மும்பை இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இந்திய பயணிகள் ஹஜ் 2021-ல் புனிதப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜூன் மாத மத்தியில் இருந்து புறப்பாடு விமானங்கள் இயங்கும். ஹஜ் 2021-க்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்களாகவே முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



மேலும் புறப்படும் நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி அவர்களுக்கு அளிக்கப்படும். எனவே, பயணத்தில் இடையூறு ஏற்படாவண்ணம் இருக்க பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக்கொண்டு தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஹஜ் 2021 தொடர்பான அதிகார பூர்வ தகவல் எதுவும் சவுதி அரசிடமிருந்து இதுவரை பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹஜ் 2021-ன் அனைத்து செயல்முறைகளும் சவுதி அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News