செய்திகள்
கோப்புபடம்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்? தமிழக அரசு உயர்நிலைக்குழு ஆலோசனை

Published On 2021-04-26 02:21 GMT   |   Update On 2021-04-26 02:21 GMT
தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் 18 முதல் 45 வயது வரையிலான பிரிவினருக்கு கோவின் செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலின் 2-வது அலை நமது நாட்டையே உலுக்கி வருகிறது. கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள், இணை நோய் உள்ளவர்கள் (45 வயதுக்கு மேற்பட்டவர்கள்) என்ற வரிசையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250-க்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 52 லட்சத்து 51 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வயது வரம்பின்றி அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்தது.



தமிழக அரசின் சார்பில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்போது முதல் தடுப்பூசி போடலாம்? எந்தெந்த இடங்களில் வைத்து தடுப்பூசி போடலாம்? என்பது குறித்து தமிழக அரசின் உயர்நிலைக்குழு ஆராய்ந்து வருகிறது. தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் 18 முதல் 45 வயது வரையிலான பிரிவினருக்கு கோவின் செயலி மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகவும் தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக உயர்நிலைக்குழு பரிசீலித்து, தமிழக அரசிடம் அறிவிக்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு தடுப்பூசி போடுவது தொடர்பான நெறிமுறைகளை விரைவில் வெளியிடும். 3-ம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
Tags:    

Similar News