செய்திகள்
கொலை

சலூன் கடை தொழிலாளி கொலை: கடைக்கு வேலைக்கு வர மறுத்ததால் அடித்து கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2021-04-25 09:38 GMT   |   Update On 2021-04-25 09:38 GMT
சலூன் கடை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி:

கோவை கலிக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(38). இவர் ஸ்டுடியோ, இறைச்சி கடை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் சலூன் கடை ஒன்றையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள தோகைமலையை சேர்ந்த குமார்(44) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த கட்டையை எடுத்து குமாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரது உடலை எடுத்து சென்று தாளியூர் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் புதைத்தார்.

இதுகுறித்து தொண்டா முத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் ஸ்டுடியோ மற்றும் இறைச்சி கடைகள் வைத்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிக்க நாயக்கன் பாளையத்தில் ஒரு சலூன் கடையை குத்தகைக்கு எடுத்தேன். இந்த கடையில் வேலை பார்ப்பதற்காக திருச்சியை சேர்ந்த நந்தகுமார்(40), தோகமலையை சேர்ந்த குமார் ஆகியோரை அழைத்து வந்தேன். அவர்கள் 2 பேரும் ஒணாம்பாளையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் குமார் நண்பரான மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து வேறு கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று நான் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு குமார் இருப்பதை பார்த்ததும், அவரிடம் சென்று ஏன் என் கடைக்கு வேலை வராமல் மற்றவர்கள் கடைக்கு வேலைக்கு போகிறாய் என கேட்டேன். அதற்கு அவர் எனக்கு வருமானம் காணாது. அதனால் நான் வேறு இடத்திற்கு சென்றேன். நீ மீண்டும் என்னுடைய கடைக்கு வேலைக்கு வா என்றேன். அவர் மறுத்துவிட்டார்.

இதனால் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நானும், நந்தகுமாரும் சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து அவரை தாக்கினோம். இதில் அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இது வெளியில் தெரிந்தால் மாட்டி கொள்வோம் என நினைத்த நாங்கள் எங்களது நண்பர்களான கபில்தேவ், அருள்பிரகாசுக்கு போன் செய்து வரவழைத்தோம். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து அவரது உடலை காரில் எடுத்து சென்று தாளியூர் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் புதைத்து விட்டோம். பின்னர் எதுவும் நடக்காதது போல எங்களது வேலையை தொடர்ந்தோம்.

ஆனால் குமாரின் உறவினர்கள் எனக்கு போன் செய்து அவரை எங்கே என கேட்டனர். நான் முறையான பதிலை அளிக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து விட்டனர். எங்கே அவர்கள் என்னை பிடித்து விடுவார்கள் என நினைத்த நான் சரணடைந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் அளித்த தகவலின் பேரில் இதில் தொடர்புடைய நந்தகுமார், கபில்தேவ், அருள்பிராகஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News