செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வேதாரண்யம் பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2021-04-23 12:35 GMT   |   Update On 2021-04-23 12:35 GMT
வேதாரண்யம் பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே தயக்கம் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்துவதற்கு பலரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு மத்திய அரசு அதன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதுமான அளவு தடுப்பூசி வரவில்லை.

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மருந்து அறவே வரவில்லை. நேற்று அங்கு தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் மருந்து இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். இந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி மருந்து வருவதற்கு மேலும் சில நாட்களாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும். கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வர நேரிட்டது. தினசரி அங்கு சென்று தடுப்பூசி போடுகிறார்களா? என்று பார்க்க வேண்டி உள்ளது. இவ்வாறு அலைக்கழிக்காமல், தேவையான தடுப்பூசி மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனர்.
Tags:    

Similar News