செய்திகள்
கோப்புப்படம்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் வடமாநில தொழிலாளர்கள் 51 பேருக்கு கொரோனா

Published On 2021-04-18 20:53 GMT   |   Update On 2021-04-18 20:53 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.
நெல்லை:

மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ‘கிரையோஜெனிக்’ என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ‘கிரையோஜெனிக்’ என்ஜின் சோதனைக்காக இரண்டாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் எடுத்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குடியிருப்பில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 11 பேர் கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் சேரன்மாதேவி அருகே பத்தமடை சிவானந்தா குருகுலத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்ரோ மையத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
Tags:    

Similar News