செய்திகள்
ராமதாஸ்

இந்தியாவில் புகைப்பிடிப்பதற்கான வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Published On 2021-04-18 07:53 GMT   |   Update On 2021-04-18 07:53 GMT
இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 12 கோடி ஆகும். புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நியூசிலாந்து நாட்டில் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக்கூடாது என்று தடை விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது.

அதன்படி பார்த்தால், 18 வயதுக்கும் குறைவான எவரும் இனி புகைப்பிடிக்க முடியாது.

அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை அடுத்தடுத்து உயர்த்துதல், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிகோட்டின் அளவை குறைத்தல், புகையிலைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்துதல், புகையிலை மற்றும் சிகரெட் விற்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகிய கட்டுப்பாடுகளையும் விதிக்க நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளின் பயனாக 2025-ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தி விட முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.


நியூசிலாந்தில் இந்தக் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதிப்பதற்கு என்னனென்ன காரணங்கள் உள்ளனவோ, அதை விட அதிக காரணங்கள் இந்தியாவில் சிகரெட் பயன் பாட்டை தடை செய்வதற்கு உள்ளன. நியூசிலாந்தில் 5 லட்சம் பேர் மட்டும் தான் புகைப்பிடிக்கிறார்கள்; அவர்களில் ஆண்டுக்கு 4,500 பேர் உயிரிழக்கின்றனர்.

இது அபாயகரமான அளவு அல்ல. ஆனாலும், புகையிலைப் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து துடிக்கிறது. ஆனால், இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 12 கோடி ஆகும். புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நியுசிலாந்தை விட 240 மடங்கு அதிகம்; உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 222 மடங்கு அதிகம். இந்தியாவை விட 240 மடங்கு குறைவாக புகைப் பிடிக்கும் வழக்கம் உள்ள நியூசிலாந்து நாடே புகைப்பழக்கத்திற்கு தடை விதிக்கவுள்ள நிலையில், இந்தியாவில் இத்தகைய தடைகளை விதிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, புகையிலை இல்லா உலகம் காண விரும்பினார்.

அதற்காக இந்தியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்கள் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தார்.

புகையிலைக்கு எதிரான அவரது நடவடிக்கைகளைப் பாராட்டி அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் சார்பில் லூதர் டெர்ரி விருது உள்ளிட்ட 4 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. புகையிலை ஒழிப்புக்காக அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18 லிருந்து 21-க உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல.

ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து அதற்குள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக புகைப் பழக்கத்தை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News