செய்திகள்
முக கவசம்

பயணிகள் முகக்கவசம் அணிய பஸ் நிலையங்களில் ஒலிபெருக்கி பிரசாரம்

Published On 2021-04-10 14:02 GMT   |   Update On 2021-04-10 14:02 GMT
கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் இன்று கூடுதலாக 350 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை மாநகர பஸ்களில் நின்று பயணம் செய்ய இன்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

பஸ்களில் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று பயணிகளுக்கு கண்டக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நின்று பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

இதனால் அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ் நிலையங்களிலும் பயணிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் சென்னையில் உள்ள பஸ்நிலையங்களில் இன்று கொரோனா எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பஸ்களில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகத்தை முழுமையாக மூடவேண்டும் என்று பிரசாரம் செய்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த நேரத்தில் பஸ் பயணிகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்த அவசியத்தை எடுத்துக் கூறினார்கள். பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று கூடுதலாக 350 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார். பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்களில் பயணம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
Tags:    

Similar News