செய்திகள்
கைது செய்யப்பட்ட சரத்குமார்.

ராமநாதபுரம் அருகே வேட்டையாடிய 4 முயல்களுடன் வாலிபர் கைது

Published On 2021-04-10 12:01 GMT   |   Update On 2021-04-10 12:01 GMT
ராமநாதபுரம் அருகே வனத்துறையினர் நடத்திய சோதனையில் இறைச்சிக்காக விற்பனை செய்ய வேட்டையாடி கொண்டுவந்த 4 முயல்களை கைப்பற்றி வாலிபரை கைது செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முயல்களை பிடித்து செல்வதாக வனப்பாதுகாப்பு படை உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின் அடிப்படையில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் ராஜசேகரன், வனபாதுகாப்பு படை வனவர் சடையாண்டி உள்ளிட்டோர் அந்த பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த சாக்குப்பையில் உயிருடன் 4 முயல்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பழனி சின்னகலையமுத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சரத்குமார் (வயது28) என்பதும் ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது முயல்களை வேட்டையாடி விற்பனை செய்ய சென்றது தெரிந்தது.

இதனை தொடர்ந்து அந்த முயல்களுடன் சரத்குமாரை பிடித்து கொண்டு வனத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு இருந்ததால் காயமடைந்து இருந்த முயல்களை விடுவித்து அதற்கு முதல்உதவி சிகிச்சை, உணவு அளித்து பாதுகாப்பாக கூண்டில் அடைத்து பறவைகள் சரணாலய பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டது. முயல்களுடன் பிடிபட்ட வாலிபர் சரத்குமாருக்கு வனஉயிரின காப்பாளர் மாரிமுத்து அபராதம் விதித்தார்.
Tags:    

Similar News