செய்திகள்
மருத்துவ முகாம்

கொரோனாவை கட்டுப்படுத்த மாநகரில் 7 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்

Published On 2021-04-10 09:54 GMT   |   Update On 2021-04-10 09:54 GMT
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், சளி காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவும், சமூக விலகலை கடைபிடிக்கவும், எந்த இடத்திலும் கூட்டம் கூடாமல் அரசு அறிவித்த விதிமுறைகளின் படி நடக்கவும் கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க 12 குழுக்களை மாநகராட்சி ஆணையர் கண்ணன் நியமித்துள்ளார்.

இந்த 12 குழுவினர்களும் இன்று முதல் நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு கடை வீதிகள், வியாபார நிறுவனங்கள், பஸ்கள் மற்றும் பொது கட்டிடங்களுக்கு சென்று அதிரடி சோதனை நடத்துவார்கள். இதில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் அரசின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், சளி காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தேகம்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தினசரி தொற்றில் 50 சதவீதம் மாநகர பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று கொக்கிரகுளம் 8-வது வார்டு பகுதி, பேட்டை, பாளை 14-வது வார்டு பகுதி, மேலப்பாளையம் 26-வது வார்டு பகுதி உள்ளிட்ட 7 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதி குழுவிலும் 2 செவிலியர்கள், 3 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொக்கிரகுளம் 8-வது வார்டு பகுதியில் நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவை குறித்து பரிசோதிக்கப்பட்டது.

மேலும் முகாமில் பங்கேற்றவர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள், உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News