செய்திகள்
கோப்புப்படம்

கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

Published On 2021-03-28 00:05 GMT   |   Update On 2021-03-28 00:05 GMT
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கொடைக்கானல்:

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி நேற்று அதிகாலை முதல் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் எதிரொலியாக, சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நேற்று காலை முதல் மாலை வரை இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. அவ்வப்போது தரை இறங்கிய மேகக்கூட்டங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்ததுடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்து உற்சாகமாக பொழுதை போக்கினர்.

இதேபோல் தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வரத்து காரணமாக, நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News