செய்திகள்
கொள்ளை

ராஜாக்கமங்கலத்தில் கோவில் கதவை உடைத்து சாமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை கொள்ளை

Published On 2021-03-19 10:46 GMT   |   Update On 2021-03-19 10:46 GMT
ராஜாக்கமங்கலத்தில் கோவில் கதவை உடைத்து சாமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே காக்காதோப்பு பகுதியில் முள்ளங்குத்தி சாஸ்தா கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்றிரவு வேலைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இன்று காலையில் கோவில் நிர்வாகி கோவிலுக்கு வந்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

சாஸ்தா சாமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகைகளும், கோவிலில் இருந்த விளக்கு ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் தங்க நாடார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

கணபதிபுரம் பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர். 2 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளை சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News