செய்திகள்
சிறுத்தை

களக்காடு அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்- பொதுமக்கள் பீதி

Published On 2021-03-17 10:09 GMT   |   Update On 2021-03-17 10:09 GMT
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிதம்பரபுரம் பகுதியில் தானியங்கி காமிராக்கள் பொருத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலகாலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி செல்வம் (வயது 65). நேற்றுமுன் தினம் இரவில் இவரது வீட்டு பின்புறமுள்ள தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை 3 ஆடுகளை அடித்துக்கொன்றது.

ஒரு ஆட்டை கடித்து விட்டு தப்பி சென்று விட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனத்துறையினர் வேட்டை தடுப்புக்காவலர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவில் மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. சிதம்பரபுரம் முத்துநகர் காலனியை சேர்ந்த சுப்பையா என்பவரது மனைவி மாரியம்மாள் (57) வீட்டில் நுழைந்த சிறுத்தை அங்கு கட்டி போடப்பட்டிருந்த 2 ஆடுகளை கடித்துக்கொன்றது. இன்று காலையில் சிறுத்தை கடித்து ஆடுகள் இறந்து கிடந்ததை கண்ட மாரியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை புகுந்த பகுதியானது குடியிருப்புகள் சூழ்ந்த பகுதி ஆகும்.

எனவே அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். 2-வது நாளாக சிறுத்தை அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு பதிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். இதுவரை 5 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது. ஊருக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், சிறுத்தை கடித்து கொன்ற ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிதம்பரபுரம் பகுதியில் தானியங்கி காமிராக்கள் பொருத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News