செய்திகள்
கோப்புபடம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2021-03-12 10:20 GMT   |   Update On 2021-03-12 10:20 GMT
திருப்பூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோட்டில் உள்ள வி.ஜி.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38) பனியன் நிறுவன ஊழியர். இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது நண்பரின் மூலம் சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த சதீஷ்ராஜா, அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த பிரேம்குமார், கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இவர்கள் 4 பேரும் திருப்பூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்தனர். சதீஷ்ராஜாவின் உறவினர் ஒருவர் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும், சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினர்.

இதை நம்பி என்னுடன் சேர்ந்த 16 பேர் மொத்தம் ரூ.84 லட்சத்து 92 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்தனர். அதன்பிறகே அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமி‌ஷனர் கார்த்திக்கேயன், துணை கமி‌ஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டுகள் வசந்தகுமார், வினோ ஆனந்தன், ஆயுதப்படை போலீஸ்காரர் கருணாசாகர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சதீஷ்ராஜா (36), பிரேம்குமாரை (36) தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது சுகாதார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மோசடியில் தொடர்புடைய கீதா, ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News