செய்திகள்
போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

Published On 2021-03-05 07:45 GMT   |   Update On 2021-03-05 07:45 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தனியார் ஆலைகளுக்கு நிலக்கரி மற்றும் உரம் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தனியார் அனல்மின் நிலையம், உரத் தொழிற்சாலைகளுக்கு சென்ற லாரிகள் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தனியார் ஆலைகளுக்கு நிலக்கரி மற்றும் உரம் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 62 இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட வாடகையே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளளோம். எனவே தங்களுக்கு 25 சதவீத வாடகை உயர்வு வழங்க வேண்டும் என கூறினர்.

இந்நிலையில் இது தொடர்பாக லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வருகிற 8-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News