செய்திகள்
தீவிபத்தில் எரிந்து சேதமான பொருள்கள்.

நாகர்கோவிலில் 5 வீடுகள் தீயில் எரிந்து நாசம்- பெண் காயம்

Published On 2021-02-25 09:11 GMT   |   Update On 2021-02-25 09:11 GMT
நாகர்கோவிலில் இன்று அதிகாலை 5 வீடுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன. இந்த தீ விபத்தில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பெதஸ்தா காம்ப்ளக்ஸ் அருகே உள்ள ஞானயா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் டேனியல் (வயது 70).

இவருக்கு அந்த பகுதியில் 5 வீடுகள் உள்ளன. இதில் 2 வீட்டில் கிறிஸ்டோபர் டேனியலும், அவரது உறவினர்களும் வசித்து வருகிறார்கள். 3 வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர். இதில் ஒரு வீட்டில் வசந்தகுமாரி, அவரது மகன் டேவிட் ஆகியோரும், மற்ற 2 வீடுகளில் அந்தோணிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

நேற்றிரவு வழக்கம்போல் அனைவரும் தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் வசந்தகுமாரி வீட்டில் திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.

உடனே வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். இதில் வசந்தகுமாரிக்கு மட்டும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் துரை தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 வீடுகளும், வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தது. வீட்டின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வசந்தகுமாரி வீட்டில் இருந்த டி.வி. உயர் மின் அழுத்தத்தின் காரணமாக வெடித்துள்ளது. அதில் இருந்த வந்த தீப் பொறிகள் வீட்டில் இருந்த துணிகளில் பிடித்து தீ பரவியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News