செய்திகள்
காரில் பயணிகள் தவறவிட்ட 40 பவுன் நகையை டிரைவர் பாபி, போலீஸ் இன்ஸ்பெக்டரிம் ஒப்படைத்தபோது எடுத்த படம்.

காரில் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

Published On 2021-02-21 01:08 GMT   |   Update On 2021-02-21 01:08 GMT
கோவையில் காரில் தவறவிட்ட 40 பவுன் நகைகளை டிரைவர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். அதன்பின்னர் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் உரியவர்களிடம் கொடுக்கப்பட்டது.
கோவை:

கோவை நியுசித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபி (வயது 46). இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டிரைவர் விடுமுறை என்பதால் பாபியே காரை ஓட்டினார். கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்தபோது காலையில் ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன் என 4 பேர் அந்த காரில் ஏறினார்கள். அவர்கள் கோவை கோர்ட்டு முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து பாபி அவர்களை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்ட பின்னர் வேறு சவாரிக்கு பாபி சென்று விட்டார்.

வெகுநேரத்துக்கு பின்னர் ஒருவர் பாபியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, நாங்கள் உங்கள் காரில் காலையில் வந்தோம். ஒரு பேக்கை காரின் டிக்கியில் தவற விட்டு விட்டோம். அது உங்கள் காரில் இருக்கிறதா? என்று கேட்டார். உடனே டிரைவர் பாபி காரின் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு கருப்பு நிற பேக் இருந்தது. உடனே பாபி அந்த பேக்கின் நிறம் என்ன? அதில் என்ன இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கார் டிரைவர் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து அவர்,அந்த பேக்கை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

அதன்பேரில் பாபி தங்க நகைகளை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதாவிடம் ஒப்படைத்தார். அவரிடம் நகைகளை தவறவிட்டதாக கூறியவரின் செல்போன் எண்ணை டாக்சி டிரைவர் கூறினார். உடனே அந்த எண்ணுக்கு போன் செய்து அடையாளங்களை கூறி பேக்கை பெற்றுக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறினார்கள். ஏனென்றால் முன்பு கார் டிரைவர் கேட்டபோது பேக்கில் என்ன இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை.

போலீசாரின் போனை தொடர்ந்து ஒரு மூதாட்டி, ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோர் வந்தனர். ஆனால் போனில் பேசியவர் வரவில்லை. அவர்களை பார்த்த டாக்சி டிரைவர் இவர்கள் என் காரில் வந்தார்களா? என்று சரியாக தெரியவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து போனில் பேசிய ஆதம் என்பவர் நேரில் வந்தார். அவரை பார்த்த பின்னர் தான் காரில் வந்தவர்கள் அவர்கள் என்று டிரைவர் உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஆதமிடம் இன்ஸ்பெக்டர் சுஜாதா ரூ.15 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 பவுன் நகைகளை ஒப்படைத்தார். பல லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசில் ஒப்படைத்த கார் டிரைவரின் நேர்மையை அனைவரும் பாராட்டினார்கள்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆதம் குடும்பத்தோடு ஆஸ்பத்திரிக்கு வந்ததால் 40 பவுன் நகைகளை வீட்டில் வைத்திருக்க பயந்து, தங்களுடன் எடுத்து வந்து தவற விட்டுள்ளனர் என்றனர்.
Tags:    

Similar News