செய்திகள்
கோப்புபடம்

திருவாரூரில், வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Published On 2021-02-18 11:09 GMT   |   Update On 2021-02-18 11:09 GMT
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
திருவாரூர்:

அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், டிரைவர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாதவர்களின் பதவி உயர்வுகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு உடனே அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தினால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் அரசு பணிகள் முடங்கியது. இதனால் பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News