செய்திகள்
கைது

பெரியகுளம் அருகே கோவிலில் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது

Published On 2021-02-14 08:18 GMT   |   Update On 2021-02-14 08:20 GMT
பெரியகுளம் அருகே கோவிலில் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

பெரியகுளம் அருகே கோவிலில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 10 பவுன் தங்க நகை, ஐம்பொன் முககவசம், சுவாமி சிலை பாகங்கள் மற்றும் உண்டியலை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் கொள்ளைபோன உண்டியல் உடைக்கப்பட்டு ஊரின் அருகே இருந்த மயானத்தில் கேட்பாரற்று கிடந்தது.

இந்நிலையில் கும்பக்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காளியம்மன் கோவிலில் கொள்ளையடித்ததை ஒத்துக் கொண்டனர்.

பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த சந்திரசேகர், டேவிட் பிரசாத், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பொருட்களையும் மீட்டனர்.

உண்டியலில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சுவாமி சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டது. அவர்களை போலீசார் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை நடந்த ஒரே வாரத்தில் அதில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News