செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் பார்வையிட்டார்

தர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

Published On 2021-02-12 10:01 GMT   |   Update On 2021-02-12 10:01 GMT
தர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்கின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி:

தர்மபுரி சோகத்தூர் டி.என்.சி. திடலில் நாளை (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ். ஆர்.வெற்றிவேல், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி. ஆர்.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

தர்மபுரியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக தர்மபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர கால சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகள் 6-ம், 30 மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பார்வையாளர்கள் அமர மாடம் அமைக்கப்பட்டு வருகிறது. 8 எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவர் என்.ஜி.சிவபிரகாசம், ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News