செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசி போட195 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி

Published On 2021-02-02 20:38 GMT   |   Update On 2021-02-02 20:38 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் ‘கோவிஷில்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்து தற்போது போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த முகாம் தற்போது வரை 17-வது நாட்களாக நேற்று நடைபெற்று வருகிறது.

இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சுகாதாரப் பணியாளர்களில் பெரும்பாலானோர் இந்த கொரோனா தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து மற்ற துறைகளான போலீசார், வருவாய்துறை, உள்ளாட்சி துறையில் உள்ள முன்களப் பனியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடலாம் என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைக்கு முதற்கட்டமாக நேற்று கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘கோவின்’ செயலியில் தமிழகத்தில் 150 மருத்துவ பணியாளர்களுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இணை இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பயனாளிகளுக்கு ஏற்ப முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News