செய்திகள்
ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

நினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2021-01-28 05:55 GMT   |   Update On 2021-01-28 08:04 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதாவின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. ‘வேதா நிலையம்’ என்ற பெயரில் உள்ள அந்த வீட்டில்தான் அவர் கடந்த 44 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவை தொடர்ந்து 2 தளங்கள் கொண்ட வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வேதா நிலையத்தை அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நினைவு இல்லம் தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்தி இருந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா ஆகியோரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது இருவரும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்களது குடும்ப சொத்து என்றும் கூறி வந்தனர்.

அதே சமயத்தில் பொதுமக்கள், அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பூர்வாங்க வேலைகள் நடத்தப்பட்டன.

பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு வேதா நிலையம் அமைந்துள்ள 24 ஆயிரம் சதுரடி நிலத்திற்கும் வீடு மற்றும் அங்குள்ள மரங்களுக்கும் சேர்த்து ரூ.68 கோடியை இழப்பீடாக நிர்ணயித்து அதற்கான தொகையை கோர்ட்டில் அரசு செலுத்தியது. உடனடியாக அந்த வீட்டையும் அரசு கையகப்படுத்தியது.

ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் முறைப்படி கோர்ட்டை அணுகி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்து இருந்தது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்கம், வைரம் நகைகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டு கலெக்டர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விட அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இன்று நினைவு இல்லமாக திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இதற்கு தீபா, தீபக் எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நேற்று ஐகோர்ட்டு நீதிபதி சேஷாயி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம். பொதுமக்கள் யாரையும் வீட்டை பார்வையிட உள்ளே அனுமதிக்க கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வேதா நிலையத்தின் நுழைவு வாயில் கேட்டை திறந்து உள்ளே சென்று திறப்பு விழா நடத்தலாம். ஆனால் வீட்டின் கதவை திறக்கக் கூடாது என்று கருத்து கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று இரவு 11 மணியளவில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தது.

அதை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி போயஸ்கார்டன் வீட்டை திறந்து திறப்பு விழாவை நடத்தலாம் என்று அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவு இல்ல திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டன.

போயஸ்கார்டன் முழுவதும் கோலாகலமாக தோரணங்களும், அ.தி.மு.க. கொடிகளும் கட்டப்பட்டு விழா கோலம் பூண்டது. ஜெயலலிதாவின் வீடு வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டில் நினைவு இல்ல திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் குவிந்து இருந்தனர்.

அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மலர் தூவி வணங்கினர். அங்கு வந்திருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் ஜெயலலிதா படத்தை வணங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்தார். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான அடிக்கல்லையும் திறந்து வைத்தார்.

அதன் பிறகு வேதா இல்லத்திற்கு சென்று குத்துவிளக்கு ஏற்றினார். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களும் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு விழாவையொட்டி போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா வீட்டின் வாசலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விழாவில் தலைமைச் செயலாளர் சண்முகம், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செ.ம.வேலுசாமி, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் சத்யா, விருகை ரவி, வேளச்சேரி அசோக், ஆதிராஜா ராம், ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், சோமசுந்தரம், மனோஜ்பாண்டியன், பெரும்பாக்கம் ராஜசேகர்.

அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஜே.சி.டி.பிரபாகரன், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், நொளம்பூர் இம்மானுவேல், முகப்பேர் இளஞ்செழியன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.

Tags:    

Similar News