செய்திகள்
சீமான்

234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டி: அதிமுக- திமுக தனித்து போட்டியிடுமா?- சீமான் கேள்வி

Published On 2021-01-27 10:03 GMT   |   Update On 2021-01-27 10:03 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தனித்துப் போட்டியிடுவார்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்:


விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் 28 வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தனித்துப் போட்டியிடுவார்களா?

தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு 17 லட்சம் வாக்குகளை மக்கள் அளித்தனர். தமிழக சட்டமன்ற பேரவைத் தேர்தலிலும் அதிகளவில் சாதிப்போம். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஓரே வாய்ப்பு நாம் தமிழர் கட்சி என்பதால் தான், மக்களை நம்பி தனித்துப் போட்டியிடுகிறோம்.

அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் சந்தைமயமாக விட்டதால், அதை நாங்கள் மாற்றுவோம். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் நாட்டு மக்கள் அனைவருக்குமான பிரச்சினையாகும்.

பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவே பிரதமர் செயல்படுகிறார். காவிரியில் கட்டப்பட்ட கல்லணை உறுதியாக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் அறியாமை, வறுமை, மறதியை முதலீடாக வைத்து அரசியல் செய்கின்றனர்.

மக்களிடம் ஆதரவு கேட்டதைப்போல ரஜினியிடமும் ஆதரவு கேட்போம். தூய தேசத்தை உருவாக்குவதே எங்களின் வாக்குறுதி

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News