செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

குடியரசு தினவிழா- கவர்னர் நாளை கொடி ஏற்றுகிறார்

Published On 2021-01-25 07:29 GMT   |   Update On 2021-01-25 07:29 GMT
மெரினா கடற்கரையில் நாளை நடைபெற உள்ள 72-வது குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
சென்னை:

72-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடக்கிறது.

நாளை காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் முப்படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அதன்பிறகு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மதுவிலக்கு அமலாக்கத்துக்கான காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பும் நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், விடுதலை போராட்ட தியாகிகள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கண்டுகளிக்கும் படி அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று மரியாதை செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதேபோல கவர்னர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News