செய்திகள்
கமல்ஹாசன்

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-01-11 02:24 GMT   |   Update On 2021-01-11 02:24 GMT
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
கோவை:

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வருகிற 13-ந் தேதி வரை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் பேசியதாவது:-

இங்கு கூடிய கூட்டத்தை பார்க்கும்போது மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் தயார் ஆகி விட்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் மாற்றத்திற்கு தமிழகமே தயாராகி விட்டது. அதன் அடையாளமாக நான் செல்லும் வழிகளெல்லாம் தாய்மார்களின் ஆசைக் கைகள் உயர்கின்றன.

இப்படி தான் இந்த கூட்டம் கூடும். இவர்களெல்லாம் கூடுவார்கள். ஆனால் ஓட்டு போட மாட்டார்கள். இது சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டம் என்று சொல்கிறார்கள். அது இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் அரிய பல திட்டங்களை விவசாயிகளுக்காக, இளைஞர்களுக்காக, இல்லத்தரசிகளுக்காக தீட்டி வைத்திருக்கிறோம். இல்லத் தரசிகளுக்கு நாங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டம் வேறு எந்த கட்சியும் ஆசிய கண்டத்திலே செய்யவில்லை என்பது தான் உண்மை. நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

தாய்மார்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்தபோது கொக்கரித்தவர்கள் இன்று ஓய்ந்து போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமும் பரிந்துரைக்கிறது இந்த திட்டத்தை.

எங்களின் திட்டங்களை செயல்படுத்த நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் நிறைவேற்றுவோம். இது சினிமாக்காரனுக்காக கூடிய கூட்டம் அல்ல. தமிழகத்தை சீரமைப்பதற்காக கூடியிருக்கும் கூட்டம். ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் கூட்டம்.

கொரோனா காலத்தில் கூட்டத்திற்குள் செல்லாதீர்கள் என்பார்கள். நான் கூட்டத்துக்குள் போகவில்லை. என் குடும்பத்துக்குள் போகிறேன். நாளை நமதாகும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News