செய்திகள்
ராமதாஸ்

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-01-11 01:35 GMT   |   Update On 2021-01-11 01:35 GMT
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்க கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சிறை பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், சிறைபிடிப்பும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துதான் இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை கடலோர காவல்படை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இதை இந்திய அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 40 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

உடனடியாக இலங்கை அரசுடன், மத்திய அரசு பேச்சு நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் மீட்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News